உடல் பருமன் எடையை குறைக்க மாற்று உணவு முறைகள்
On December 30, 2022 In அழகு குறிப்புகள்

பெரும்பாலும் வயிறு போடாத மெலிந்த உடல் அமைப்பே வசீகரத்தை தரும். அதிலும் இன்றைய இளைஞர்கள் பலர் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனை உடல் பருமன் தான். இளைஞர்கள் மட்டும் அல்ல திருமணமாகி குழந்தையைப் பெற்ற பெண்களும் கூட இந்த உடல் பருமன் பிரச்சனையில் இருந்து தப்பிப்பது இல்லை.
1. அது சரி. ஏன் "உடல் பருமன் " பிரச்சனையாக உள்ளது ?
உடல் பருமன் என்பது ஒரு மனிதன் சராசரியாக இருக்க வேண்டிய எடையை விட 20 சதவிகிதம் கூடுதலாக இருக்கும் நிலையாகும். உடல் பருமன் உடல் நலத்தைக் கெடுக்கும். உடல் பருமன் மூலம் ஒருவருக்கு இரத்த அழுத்தம், இருதய நோய், நீரிழிவு நோய், சில புற்று நோய், முடக்குவாதம், தூக்கமின்மை போன்ற எண்ணற்ற பின் விளைவுகள் தோன்றி ஆயுட்காலமும் குறையும்.
2.எதனால் "உடல் பருமன்" ஏற்படுகிறது ?
(i) பரம்பரை உடல் வாகு.
(ii) உடல் உழைப்பின்மை, எந்த வித உடற் பயிற்சியிலும்/நடைப்பயிற்சியிலும் ஈடுபடாதிருத்தல்.
(iii) அசைவ உணவு, எண்ணெய் உணவு பொருட்கள், ஜாம், ஜெல்லி, கேக், ஐஸ்கிரீம், குளிர் பானங்கள், சாக்லேட் ஆகியவற்றை அதிகமாக உண்ணுதல்.
(iv) மாறிவரும் கலாச்சாரமும், அடிக்கடி உணவகம் சென்று சாப்பிடுதலும், துரித உணவுகளும், உடல் பருமனுக்கு முக்கியப்பங்கு வகிக்கிறது.
(v) மன அழுத்தம். (vi) உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை.
(vii) உண்டி குறைத்தல் பெண்டிர்க்கு அழுகு. ஆனால் பெரும்பாலான தாய்மார்களோ மீதமுள்ள உணவை வீணாக்க மனமில்லாமல் தாங்களே உண்ணுதல்.
(viii) இந்த அவசர கணினி யுகத்தில் உண்பதற்கு கூட நேரம் இல்லாமல் உணவை மென்று விழுங்காமல் அவசர அவசரமாக விழுங்குவதன் மூலம் அதிக அளவில் உட்கொள்ளுதல்.
3. "உடல் பருமனால்" ஏற்படும் விளைவுகள் என்ன?
உடல் பருமனால் ஒரு மனிதனுக்கு உடல்ரீதியாக மட்டுமின்றி உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். அதிக பருமனால் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய பல நோய்கள் தாக்குகின்றன. மாரடைப்பு, உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை, இடுப்பு எலும்புகள், முதுகுத்தண்டு, முழங்கால் மூட்டுகள் தேய்மானம், குடலிறக்கம், அசுத்த ரத்த நாளப் புடைப்பு... போன்ற பல மோசமான நோய்கள் முற்றுகையிடுகின்றன. மந்த இயக்கம், சோர்வு, பலவீனம் காரணமாக அடிக்கடி கீழே விழ நேரிடலாம் அல்லது விபத்து நேரிடலாம். வீட்டில், வயலில், தொழிற்சாலையில், இதரபணியிடங்களில் நிற்பது, நடப்பது, பணியாற்றுவதும், உடல் சுகாதாரம் பேணுவதும் மிகச்சிரமம். உடல் பருமன் ஒருவித நரம்பியல் நோயை ஏற்படுத்துகிறது. உளவியல் ரீதியாக மனச்சோர்வு, தன்னம்பிக்கை குறைவு, பயம், தாழ்வு மனப்பான்மை போன்ற பிரச்சனைகள் பாதிக்கின்றன. தனது பருமன் தனக்கு மட்டுமின்றி குடும்பத் திற்கும், உலகத்திற்கும் சுமை எனும் உணர்வு ஏற்பட்டு விரக்தியும் மன அழுத்தமும் மேலோங்கும்.
சரி. இதனை எப்படி சரி செய்வது? "உடல் பருமன்" ஆகாமல் தடுக்க வழிகள் என்ன ? இனி வரும் பதிவுகளில் காண்போம் வாருங்கள்.
உடல் எடையை குறைக்க உதவும் கிரீன் டீ ஒரு பார்வை
இன்றைய கால கட்டத்தில் கிரீன் டீ உடல் எடையை குறைக்க அதிகம் உதவுகிறது. ஆனால் அதிலும் போலிகள் வந்து விட்டதால் சற்று கவனமாக வாங்கவும். அது சரி கிரீன் டீ குடிப்பதால் எப்படி உடல் எடை குறைகிறது வாருங்கள் அதையும் பார்ப்போம்.
கிரீன் டீயில் வைட்டமின்களான ஏ, பி, பி5, டி, ஈ, சி, கே, எச் மற்றும் செலினியம், குரோமியம், ஜிங்க், காப்ஃபைன், மாங்கனீசு போன்றவை வளமாக நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, கிரீன் டியில் EGCG என்னும் சேர்மமும் உள்ளது. உடல் சாதாரணமாகவே வெப்பத்தை உருவாக்கும். இந்த வெப்பம் தான் கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஆனால் கிரீன் டீ குடிக்கும் போது, உடலின் வெப்பமானது அதிகரிக்கப்படுகிறது. கிரீன் டீயினால் உடலின் வெப்பம் அதிகரிப்பதற்கு காரணம், அதில் உள்ள EGCG தான். இப்படி வெப்பம் அதிகமாவதால், கலோரிகளின் அளவு அதிகமாக எரிக்கப்படுகிறது. கலோரிகள் அதிகம் எரிக்கப்படுவதால், உடல் எடை வேகமாக குறைகிறது. கிரீன் டீயின் ஒரு கப்பில் 30 மி.கி காப்ஃபைன் உள்ளது. காப்ஃபைன் உடலின் ஆற்றலை தூண்டி, உடற்பயிற்சியில் நீண்ட நேரம் சிறப்பாக ஈடுபட உதவி, அதன் காரணமாக மறைமுகமாக உடல் எடையைக் குறைக்கிறது. மேலும் கிரீன் டீ குடிக்காமல் உடற்பயிற்சி செய்து வந்தவர்களின் உடலில் 3% கொழுப்புக்கள் தான் கரைக்கப்பட்டிருந்ததாம். அதே சமயத்தில், கிரீன் டீயை ஒரு நாளில் 2-3 கப்பிற்கு மேல் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் இதய துடிப்பை அதிகரித்து, தூக்கமின்மை, குமட்டல், வாந்தி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, களைப்பு, மன இறுக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும். கிரீன் டீயை குடிக்க ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது. அதிலும் உங்களுக்கு இதயம் பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இரத்த சோகை, ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை இருந்தால், கிரீன் டீ குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். அது பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
இது தவிர உடல் எடையை அவசியம் குறைக்க விரும்புபவர்கள் சில மாற்று உணவுகளை கீழ்க்கண்டவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் நலம்
உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கான மாற்று உணவுகள்!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களது காதலர்களுக்கு கூட எளிதாக "குட்-பை" சொல்லிவிட முடிகிறது. ஆனால், தங்களது தொப்பைக்கு "குட்-பை" சொல்வது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது. எத்தனையோ டயட்டுகள், பயிற்சிகள்.., இருந்தும் உங்களால் உடல் எடையை குறைக்க முடியவில்லையா? கவலையை விடுங்கள்.
நீங்கள் இப்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவுகளுக்கு மாறாக, மாற்று உணவாக இந்த உணவுகளை சாப்பிடுங்கள், நிச்சயமாக உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படும்….
சர்க்கரைக்கு பதிலாக தேன் :
இனிப்பு யாராலும் தடுக்க முடியாத உணவு. ஆனால் இது உடல் எடையை கூட்டக் கூடியது அதனால் நீங்கள் சர்க்கரையை தவிர்த்து தான் ஆக வேண்டும். இதற்கு மாற்று உணவாக நீங்கள் தேனை சாப்பிடலாம். தேனை நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கூட உடல் எடை குறையும் என்பது நம்ம ஊர் பாட்டி வைத்தியம்.
கிரீம் உணவிற்கு பதிலாக தயிர் சாப்பிடுங்கள் :
இன்று கிரீம் உணவுகள் சாப்பிடும் பழக்கம் பெரும்பாலும் அனைவரிடமும் இருக்கிறது. உடல் எடை அதிகரிக்க இதுவும் ஓர் காரணமாக விளங்குகிறது. எனவே, இதற்கு மாற்றாக நீங்கள் தயிரை சாப்பிடலாம். ஆனால், வீட்டில் தயாரித்த சுத்தமான தயிர். ஏனெனில், சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான தயிர்களில் ஃப்ளேவர்கள் மற்றும் செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதுவும், உங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
எனர்ஜி ட்ரிங்க்ஸ் மாற்றாக இளநீர் :
உடலியக்க சக்தியை அதிகரிக்க கட்டாயம் நமக்கு ஓர் எனர்ஜி ட்ரின்க் வேண்டும். ஆனால் இரசாயன கலப்பு உள்ள பூச்சிக்கொல்லி அல்ல இயற்கை பானமான இளநீர். எனர்ஜி ட்ரிங்கில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் உடல்நலத்திற்கு தீங்கானது.
காபிக்கு பதிலாக கிரீன் டீ :
அதிகமாக காபி குடிப்பது உடலுக்கு தீங்கானது. ஆனால், கிரீன் டீ உடலுக்கும் நல்லது, உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
உருளைக்கிழங்கு மாற்று உணவாக சர்க்கரைவள்ளி :
கிழங்கு உருளைக்கிழங்கு வாயுப் பிரச்சனை மற்றும் உடல் எடையை அதிகரிக்கும் பண்புடையது. ஆனால், சர்க்கரைவள்ளி கிழங்கு உடல் எடை குறைக்கவும் உதவும், உங்கள் கல்லீரலுக்கும் சக்தி கொடுக்கும் தன்மையுடையது.
மைதா பிரெட்க்கு மாற்றாக கோதுமை பிரெட் :
மைதா பிரெட்டில் சத்து என ஏதும் இல்லை, மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடவே கூடாது. ஆனால், கோதுமை பிரெட்டில் நிறைய நார்ச்சத்து இருக்கிறது. இது உடல் எடை குறைக்கவும் உதவும்.
ஐஸ்கிரீம் களுக்கு பதிலாக பழங்கள் :
ருசிக்காக ஐஸ் கிரீம் சாப்பிடுவதை தவிர்த்து உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் பழங்களை சாப்பிடலாம்.
சாதாரண எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெய்:
ஆலிவ் எண்ணெய் இதயத்திற்கும் நல்லது உடல் எடையை குறைக்கவும் உதவும். எனவே, உடல் எடை பிரச்சனை உள்ளவர்கள் சாதாரண எண்ணெய் அல்லது காய்கறி எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்து இனி ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
உடல் எடையை குறைக்க வேண்டுமா? பச்சை பயிறு சாப்பிடுங்க..
பருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம். பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
பச்சை பயிரின் இதர நற்பலன்கள்
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பச்சை பயிறு:-
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.
சத்துக்கள் நிறைந்தது பச்சை பயிறு:-
பச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.
சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்:-
பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
எடையைக் குறைக்கும் பச்சை பயிறு:-
உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.
உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும். உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு : கொழுத்தவனுக்கு கொள்ளு… இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது அக்காலப் பழமொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும். புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம். புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இரு வகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. எனவே, சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின் மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.இந்த கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பை எல்லாம் கரைக்கக் கூடியது என்பதால் அடிக்கடி இதனை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நலம்.
உடல் நலம் காக்கத் துடிப்பவர்கள் பரோட்டாவை தவிர்ப்பது நல்லது :
பரோட்டா பிரியர்களா நீங்கள்? அப்படி என்றால் சீக்கிரமே லட்சக்கணக்கில் பணம் செலவளிக்கத் தயாராக இருங்கள். காரணம் இந்த பரோட்டா இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கு மாரடைப்பை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகளுள் ஒன்றாக உள்ளது. ஆம்! உடலில் தேவை இல்லாத கொழுப்பை கூட்டி அதன் மூலம் உடல் எடையையும் கூட்டி குறிப்பாக உடல் பருமன் கொண்டவர்களை மாரடைப்புக்குத் தள்ளக் கூடியது தான் இந்த பரோட்டா என்கிற எமன். பரோட்டா மைதாவில் தயாரிக்கப்படுவது அனைவருக்கும் தெரியும் தான். இந்த மைதா என்பது கோதுமையின் எண்டோஸ்பெர்மில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. எண்டோஸ்பெர்ம் எனப்படும் கோதுமையின் உள்பகுதியை அரைத்தால், மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
இதனுடன் அசோடிகார் போனமைட், குளோரின் வாயு, பென்சாயில் பெராக்சைடு போன்ற வேதிப்பொருட்கள், மிருதுவாக மாற்ற அலக்ஸான் எனும் வேதிப்பொருள் போன்றவை சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது மைதா. அத்துடன் மைதாமாவு வெள்ளையாக காணப்படவும் எண்ணற்ற வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக மைதா மாவை பிளீச் செய்யப் பயன்படும் பென்சாயில் பெராக்சைடு வேதிப்பொருளுக்குச் சீனா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மைதாவில் சர்க்கரைச் சத்தைக் கொண்ட 100 சதவீத ஸ்டார்ச் எனப்படும் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது. நார்ச்சத்து, வைட்டமின், புரதம் போன்ற எதுவுமே இருக்காது. இதனால் எளிதில் ஜீரணமாகாது.பரோட்டா சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, இதய நோய்கள், உடல் பருமன், புற்றுநோய், நீரிழிவு நோய், சிறுநீரகக் கல், மன அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படலாம். பரோட்டா மட்டுமல்லாமல் மைதா மூலம் தயாரிக்கப்படும் எல்லாப் பேக்கரி உணவுகளாலும் இந்த நோய்கள் வரக்கூடும். அதனால் மைதாவை இன்றே புறக்கணிப்போம். அதிகமாக கோதுமையை சேர்த்துக் கொள்வோம்.
பத்தே நாட்களில் எடையை குறைக்க கீழ்க்கண்ட வழி முறையை பின்பற்றுங்கள்:-
1. முதல் நாள் வெறும் தண்ணீர் மட்டும் பருக வேண்டும். அதிலும் நாள் முழுவதும் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
2. இரண்டாம் நாள் க்ரீன் டீயை பருக வேண்டும்.
3.
தொடர்ந்து மூன்றாம் நாள் ஐஸ் தண்ணீரைப் பருக வேண்டும்.
4. நான்காம் நாள் 5 லிட்டர் தண்ணீரைப் பருக வேண்டும். அதுவும் அந்த நீரில் 2 டேபிள் ஸ்பூன் வெல்லத்தைச் சேர்த்து கலந்து பருக வேண்டும். இது உடலுக்கு சக்தி அளிக்கும்.
5. ஐந்தாம் நாளன்று நான்கு முறை ஒரு கப் உங்களுக்கு பிடித்த சூப்பை குடிக்க வேண்டும்.
6. ஆறாம் நாள் வெறும் பழங்களால் செய்யப்பட்ட பிரஷ் ஜூஸ்களை குடித்து வர வேண்டும்.
7. குடிக்கும் நீரில் 1 சிட்டிகை சர்க்கரை மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து குடித்து வர வேண்டும்.
8. எட்டாம் நாளன்று சுடுநீரை குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைய ஆரம்பித்து, செல்லுலைட்டின் அளவையும் குறைக்கும்.
9. ஒன்பதாம் நாளன்று மூலிகையால் செய்யப்பட்ட டீயை பருகி வாருங்கள்.
10. எலுமிச்சை ஜூஸை பத்தாம் நாளன்று தேன் மற்றும் 1 சிட்டிகை பட்டைத் தூள் சேர்த்து குடித்து வர வேண்டும்.
ஆரோக்கியமான உடல் அமைப்பை பெற இன்னும் சில பின்வரும் டிப்ஸ்
-
தினமும் காலையில் எழுந்தவுடன் கால் டம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் தேனும் கொஞ்சம் எலுமிச்சைச் சாறும் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க உடல் எடை குறையும். அத்துடன் இது ரத்தத்தையும் சுத்திகரிக்கும்.
-
இன்றைய அவசர உலகத்தில் காலை சாப்பாட்டை சிலர் தவிர்க்கின்றனர். இது அவ்வளவு நல்லதல்ல. இப்படிக் காலை சாப்பாட்டை தவிர்ப்பதும் கூட உடல் எடையைக் கூட்டிவிடும். எனவே நேரத்திற்கு உணவு அருந்துவது தான் தேக ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும், மதிய வேளையில் சாதத்தை அதிகம் எடுப்பதைக் காட்டிலும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல் நலம்.
-
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு அடிக்கடி பசிக்கும் என்கிற நிலையில் சாப்பாட்டை அவர்கள் பிரித்து இரண்டு மணி நேரத்திற்கு மிதமாக அதிலும் காய்கறிகள், பயிர்வகைகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. கோதுமை வகைகளான சப்பாத்தி போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பண்டங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.
-
உடல் பருமன் உள்ளவர்களுக்கு இன்னொரு எதிரி நொறுக்குத் தீனி. அவசியம் இதனைத் தவிர்த்து விட்டு பழங்களை எடுத்துக் கொள்ளப் பழகுங்கள். அதுவே நன்மையைத் தரும்.
-
ஜிம் போக முடியாதவர்கள் அல்லது நேரம் இல்லாதவர்கள் சைக்ளிங், ஸ்கிப்பிங் போன்றவற்றை செய்வது நல்லது. இது தவிர அளவாக சாப்பிடுவது ஆரோக்கியத்தைத் தரும்.
-
ஒருவகையில் வீடு பெருக்குவது தொடங்கி தண்ணீர் இறைப்பது வரையில், நமக்கான வேலைகளே கூட மிகப் பெரிய பயிற்சி தான்.
-
சீரகத் தண்ணீரை அதிகம் பயன்படுத்த பயன்படுத்த உடல் எடை குறையும். இருதய அடைப்பு கூட ஏற்படாது என்று நம்பப்படுகிறது.
-
ஒரு நாளைக்கு அதிகத் தண்ணீரைக் குடிப்பது கூட உடலில் இருந்து வியாதிகளை துரத்தும். தவிர அதிகமாகத் தண்ணீர் குடிப்பதால் வயிற்றில் இடம் இல்லாமல் கொஞ்சமாக உணவு உண்போம். எனவே இது கூட உடல் எடையை குறைக்க வழி செய்கிறது.
-
ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணி நேரம் தூங்குவது அவசியம் எதற்காகவும் அந்த நேரத்தைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்.
-
சாப்பிடக் கூட நேரம் இல்லாத அளவுக்கு வேலையா? எனில் அந்த சமயத்தில் இரண்டே இரண்டு வாழைப் பழங்களை உண்டால் போதும். மினி மீல்ஸ் சாப்பிட்ட அளவுக்கான சக்தி அதிலேயே கிடைக்கும்.
-
ஏதாவது ஒரு விளையாட்டை முடிந்தால் கற்றுக் கொள்ளுங்கள். அது ஓடியாடும் விளையாட்டாக இருத்தல் அவசியம்.
-
ஜுஸ் அல்லது தண்ணீர் என திரவ உணவுகளை அதிகமாக்கிக் கொள்ளுங்கள். அது உடல் எடையை குறைக்க உதவும்.
-
தினமும் ஒரு கீரையை உணவில் சேர்ப்பதும் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
-
பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவரம் பருப்பு, மிளகு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர மூன்று மாதங்களில் உடல் பருமன் குறைந்து நல்ல ஆரோக்கியமாகவும் நல்ல தேஜசும் வீரிய விருத்தியும் உண்டாகும். அத்துடன் கண் சம்மந்தப்பட்ட பிரச்சனையும் விலகும்
-
குண்டான உடம்பு கரைந்து கெட்டிப்பட நீல ஆலாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியால் சலித்து வைத்துக் கொண்டு தேனில் குலைத்து சாப்பிட்டு வர உடல் வற்றி கெட்டிப்படும்.
-
கீழாநெல்லி இலை, கருவேல மரத்துக் கொழுந்து, கரிசலாங்கண்ணி இலை, சோற்றுக் கற்றாழையின் வேர், கடுக்காய், களிப்பாக்கு இவற்றை சம அளவு எடுத்து இரண்டு ஆழாக்கு தண்ணீரில் போட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை ஓர் அவுன்ஸ் சாப்பிட்டு வர உடம்பு வற்றும். இந்த மருந்தை சாப்பிடும் சமயத்தில் உப்பு, புளி போன்றவற்றை கண்டிப்பாக சேர்க்கக் கூடாது.
-
உடல் எடை குறைய கல்யாண முருங்கை இலை, அதன் பூ இவற்றை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்பளர் நீரில் போட்டுக் காய்ச்சி அரை டம்பிளராக வற்றியதும் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நல்ல பலன்கள் கிட்டும்.
-
வாரத்திற்கு இரண்டு நாட்கள் கொள்ளு ரசம் வைத்து சாப்பிட உடல் பருமன் குறையும். 100 கிலோவுக்கு மேல் உள்ளவர்கள் தினசரி சாப்பிடுவது நல்லது. அதனால் இருதய நோயை எதிர்காலத்தில் தடுக்கலாம்.
-
காரட் மோர் கலந்த பச்சடியை தினமும் சாப்பிட்டு வர அதிகப்படியான சதை குறையும்.
-
ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கு முன்பும் நாக்கு பொறுக்கும் அளவு ஒரு டம்பளர் வெந்நீரை மட மட வென்று குடிக்க உடல் எடை நன்றாகக் குறையும். இது ஆய்வில் கண்ட உண்மை.
-
இரவு படுக்கப் போவதற்கு முன்னாள் பசும் பாலில் தேனும், மஞ்சள் பொடியும், குங்குமப் பூவும் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் அழாகாக காணப்படும்.
-
கல்யாண முருங்கைச் சாறு ஆழாக்கு எடுத்து வடிகட்டி 350 கிராம் சீனாக் கற்கண்டு சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி பதமாக இறக்கி வைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை ஓர் அவுன்ஸ் வீதம் எடுத்து நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் ஊதல் குறையும். ஆனால் இதனை கர்பிணிப் பெண்கள் அருந்துதல் கூடாது.
-
வில்வ இலையை பொடித்து கஷாயம் வைத்துச் சாப்பிட உடல் எடை குறையும்.
-
வெள்ளைப் பூண்டின் சாற்றுடன் நீர் கலந்து ஒரு வாரம் சாப்பிட உடல் பருமன் குறையும்.
-
உணவு சாப்பிடுவதற்கு முன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து உணவு சாப்பிட உடல் பருமன் குறையும்.
திருக்குறள்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
பொருள்;
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.