நெல்லிக்கனி- இனி ஆரோக்கியம் எப்போதும் உங்கள் உள்ளங்கையில்
On January 2, 2023 In ஆரோக்கியம்

உடல் இளமையாக இருக்க தினம் ஒரு நெல்லிக் கனியை எடுத்துக் கொள்ளுங்கள்
நெல்லிக்கனியை சாப்பிட்டு வருபவர்களுக்கு வளமான தலைமுடி; துல்லியமான பார்வை; வழவழப்பான சருமம், கல்போன்ற இறுகிய தசைநார்கள்; படபடப்பற்ற இதயம்; சுறுசுறுப்பான மூளை; சளியற்ற நுரையீரல்; விறுவிறுப்பான நடை கல்லையும் கரைக்கும் கல்லீரல்; வலியற்ற மூட்டுக்கள்; அயராது உழைக்கும் கரங்கள் ஆகியவற்றுடன் சுருங்கக் கூறின் வளமான உடல் நலம் பெறலாம். எல்லாவற்றுக்கும் மேலாக 50ல் முதுமை என்ற நிலையைக் குறைந்தபட்சம் 60ல் முதுமை என்ற அளவிற்குத் தள்ளிப் போடலாம்.
ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் ‘சி’யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய்.இன்னொரு அற்புதமான விஷயம் என்னவென்றால், மற்ற இயற்கை உணவுகளைப்போல் இல்லாமல் நெல்லிக்காயை சமைத்து உண்டாலும் அதனுடைய சத்து சமைப்பதனால் குறைவதே கிடையாது.
கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. மனிதனுடைய ஈரல் இந்த கொழுப்புச் சத்திற்கு அடிப்படையாக அமைவது. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகிவிடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் ‘சி’ இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்துவிடும். இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம்.
இந்த நெல்லிக்கனியைப் பல்வேறு முறைகளில் பயன்படுத்தலாம். நெல்லிச்சாறு, சர்பத், நெல்லிபர்பி, நெல்லிமுரப்பா, உலர்நெல்லி, நெல்லிப்பொடி, லேகியம், விதைப்பொடி, நெல்லித்தைலம், நெல்லிநீர், திரிபலா, ஊறுகாய் போன்று பல்வேறு வகைகளில் பயன்படுத்தலாம்.
நெல்லிக்கனி என்பது “நல்வாழ்வுக்கனி’ என்ற உண்மை அனுபவத்திலும் அறிவியலிலும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உறுதியாகியுள்ளது அல்லவா? இதுவே உன்னத காயகல்பம்! இதனைத் தினசரி உண்பவர்கள், கடைகளில் காயகல்ப மருந்து தேடி அலைய வேண்டாம்!
”An apple per day, keeps the doctor away” என்பது ஆங்கிலப் பழமொழி. “தினம் ஒரு நெல்லிக்கனி, தீர்க்காயுளை அள்ளித்தரும்’ என்பது அனுபவமொழி ஆகும்.
நெல்லிக் கனியின் இதர மருத்துவப் பயன்கள்:-
- நெல்லியை இடித்துச் சாறு பிழிந்து தேன் சேர்த்து சிறிதளவு திப்பிலிப் பொடி கலந்து சாப்பிட்டு வர சுவாச காசம் குணமாகும்.
- உலர் பழத்தைச் சாப்பிட்டு வர கண்பார்வை கூடும். வயிற்றுப்போக்கு நிற்கும்.
- நெல்லிச்சாற்றை அருந்தி வர நுரையீரல் பெருக்கம் தீரும். புழுக்களை அழிக்கும்.
- நெல்லியை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி, மூலநோய் நீங்கும்.
- நெல்லிச்சாறு உடலிலுள்ள அதிக சர்க்கரையைக் குறைக்கும்.
- நாள்தோறும் ஒரு நெல்லிக்கனி தின்றால் இதயக் கோளாறுகள் நீங்கும். நரம்புத் தளர்ச்சி, இளநரை, தோல் சுருக்கம் போன்றவை குணமாகும்.
- பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து சாப்பிட்டுவர கீல்வாதம், நரம்புத் தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாகும்.
- நெல்லியை உலர்த்திப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்க உடலில் சொறி, தோல் சுருக்கம் நீங்கும்.
- உலர் நெல்லியை நீரில் போட்டு ஊறவைத்து இந்நீரில் கண்களைக் கழுவி வர கண்நோய்கள் குணமாகும்.
- நெல்லிப் பொடியுடன் தேன் அல்லது நெய் கலந்து இரவில் சிறிதளவு உண்டுவர கண்பார்வை மங்குதல் மாறும்.
- நெல்லிக்கனியை, எலுமிச்சை இலைகளோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து, நரை (ஆரம்பக்கட்ட நரை) முடிகள் மேல் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின் இளஞ்சூடான நீரில் குளித்து வர நரை மேலும் தோன்றாது.
- நெல்லியை அரைத்து நெற்றியில் பற்றுப் போட சளியுடன் கூடிய தலைபாரம், தலைவலி நீங்கும்.
- நெல்லிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட சளி, தும்மல் நீங்கும்.
- பாலில் நெல்லிப்பொடியைக் கலந்து கொதிக்க வைத்து, சிறிதளவு நெய்விட்டு கலக்கி அருந்திவர கக்குவான் இருமல் குணமாகும்.
- நெல்லிக்காயைத் தின்று வந்தால் பயோரியா நோய், ஸ்கர்வி நோய் நீங்கும். பல் கிருமிகள் அழியும்.
- நெல்லிச்சாறில் சந்தனம் உரைத்து சிறிதளவு உட்கொள்ள குமட்டல், வாந்தி நிற்கும்.
- நெல்லி விதையை ஊறவைத்து அரைத்து, பாலில் கலந்து சாப்பிட மூலநோய் குணமாகும்.
- நெல்லி லேகியம் உண்டு வந்தால் இதயம் வலிமை பெறும். இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும்.
- நெல்லிச் சாறுடன், வாழைப்பட்டை சாறு கலந்து அருந்த பாம்பு, தேள், வண்டு நஞ்சுகள் இறங்கும்.
- நெல்லிப்பொடி, நெல்லி லேகியம் இவைகள் மதுவால் புண்ணாகிப்போன உள்ளுறுப்புகளைச் சீராக்கும்.
- ஆமலகம் என்று கூறப்படும் நெல்லியின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். கருநெல்லி (கிடைப்பது அரிது), அருநெல்லி (எளிதில் கிடைக்கும்) என இரு வகைப்படும். நெல்லிக்காய் பசுமை நிறமாகவும், நெல்லிப்பழம் வெண்மஞ்சள் நிறமாகவும் காணப்படும். நெல்லிப்பழம் உலர்ந்த பின்னர் கருப்பாக இருக்கும். இதற்கு நெல்லிமுள்ளி என்று பெயர். இதனை நெல்லி வற்றல் என்றும் அழைப்பர். நெல்லி முச்சுவை உடையது; முதல் சுவை புளிப்பாகவும், இனிப்பாகவும் இருக்கும். நெல்லியை சுவைத்த பின்னர் தண்ணீர் அருந்தியவுடன், இனிப்புச் சுவையான நீர்போல் சுவைப்பதன் காரணம் இதுதான். நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.
* நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும்.
* நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி நீங்கும்.
* நெல்லி மரத்தின் பாகங்களை காயகல்ப முறைப்படி சாப்பிட்டு வந்தால், பெருவயிறு, இரத்தசோகை, மூலம், பெண்களுக்கு உண்டாகும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை நீங்கும்.
* நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தை நன்கு அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் சீதத்துடன் கூடிய கழிச்சல் தீரும்.
* நெல்லிவற்றலை தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.
திருக்குறள்
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
பொருள்;
செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.