வடிவேலு பிறந்தநாள் ஸ்பெஷல்: மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் மறுவருகை  | Vadivelu Birthday Special: The reentry that will rejuvenate movie lovers


வைகைப்புயல் வடிவேலு இன்று தன்னுடைய 61ஆம் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். வடிவேலு எப்போதும் ரசிகர்களால் எல்லா நேரமும் கொண்டாடப்பட்டுவருகிறவர்தான்.

அவருடைய பிறந்தநாள் என்பது கூடுதல் கொண்டாட்டத்துக்குரியது. அதுவும் இந்திய பாரம்பரியத்தில் 60ஆம் பிறந்தநாள் என்பது மனித வாழ்வில் மிக முக்கியமான மைல்கல். கடந்த ஆண்டு கடந்து சென்ற வடிவேலுவின் 60ஆம் பிறந்தநாள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் வடிவேலுவின் இந்த ஆண்டு பிறந்தநாள் அதைவிட பன்மடங்கு கொண்டாட்டத்துக்குரியதாகிறது. அவர் மீண்டும் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கப் போகிறார் என்பதே இதற்குக் காரணம்.

கடந்த பத்தாண்டுகளாக வடிவேலு நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். ரசிகர்களின் மிக நீண்ட காத்திருப்புக்கும் ஏக்கத்துக்கும் வித்திட்ட இந்த இடைவெளிக்கு திரைப்பட உலகுக்கும் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் சொல்லப்படாத பல காரணங்கள். வடிவேலுவின் 60ஆம் பிறந்தநாளுக்காக ‘திரைவாழ்விலும் மணிவிழா கொண்டாட வாருங்கள் வடிவேலு’ என்னும் தலைப்பில் இந்து தமிழ் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த சிறப்பு கட்டுரையில் அவர் மீண்டும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தன்னுடைய திரைப் பயணத்திலும் 60ஆண்டுகளை நிறைவு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தோம் (https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/577820-vadivelu-special-article.html). நம்முடையது மட்டுமல்லாமல் கோடிக்கணக்கான தமிழர்களின் அந்த அன்பான வேண்டுகோள் நிறைவேறுவதற்கான காலம் கனிந்துவிட்டது.

ஆம்! வடிவேலு திரைப்படங்களில் நடிப்பதற்குத் தடையாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தீர்க்கப்பட்டதாகவும் வடிவேலு ஐந்து திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருப்பதாக அவரே அறிவித்திருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கரோனா பெருந்தொற்றால் கொடூரமாக துண்டாடப்பட்ட இந்த ஆண்டின் மிகப் பெரிய நற்செய்தி. மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்துக்கும் பெரும் நம்பிக்கைக்கும் உரிய செய்தி.

முதலில் சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர்’ என்னும் தலைப்பிடப்பட்ட திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கப்போகிறார் வடிவேலு. சுராஜ் இயக்கிய ‘தலைநகரம்’ திரைப்படத்தில் வடிவேலு ஏற்று நடித்த ‘நாய் சேகர்’ கதாபாத்திரம் அவருடைய திரைவாழ்வில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் ஒன்று. நடிகை த்ரிஷாவை திருமணம் செய்துகொள்ளும் கனவுடன் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து படத்தின் கதாநாயகியான ஜோதிர்மயியை ஒரு தலையாக காதலிக்கும் சிரிப்பு ரெளடி ‘நாய் சேகர்’ஆக அவர் செய்த நகைச்சுவைகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை விலா நோக சிரிக்க வைத்தவை. ‘த்ரிஷா இல்லன்னா திவ்யா’, ‘இதுதா அழகுல மயங்கறதா’, ‘என்ன வெச்சு காமடி கீமடி பண்ணலியே’, ‘நானும் ரவுடிதான்’, ‘பில்டிங்கு ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட்டு வீக்கு’, ‘எனக்கு எண்டே கிடையாது’ என்று இந்த படத்தில் வடிவேலு பேசிய பல வசனங்கள் ரசிகர்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டவை. சமூக வலைத்தளங்களில் மீம்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறவை. சமூக வலைத்தளப் பதிவுகளிலும் அன்றாட பேச்சுவழக்குகளிலும்கூட இந்த வசனங்கள் அடிக்கடி இடம்பெறுவதுண்டு. வடிவேலுவின் பல திரைப்படங்களின் வசனங்களுக்கு இது பொருந்தும் என்றாலும் ’தலைநகரம்’ நாய்சேகரின் வசனங்களுக்கு இந்தப் பட்டியலில் தனிச்சிறப்பு மிக்க இடம் உண்டு. இப்போது அந்தக் கதாபாத்திரத்தை வைத்தே ஒரு திரைப்படம் தயாரிக்கப்படுவதும் அதுவே வடிவேலுவின் மறுவருகைப் படமாக அமைவதும் ரசிகர்களின் எதிபார்ப்பைப் பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன.

‘தலைநகரம்’ படத்தில் நாய் சேகர் கதாபாத்திரத்தின் இறுதிக் காட்சியில் ‘எனக்காடா எண்டுகார்டு போட்டு எகத்தாளம் பண்றீங்க… எனக்கே எண்டே கிடையாதுடா…” என்று பஞ்ச் வசனம் பேசிவிட்டுப் போவார் வடிவேலு. அது வெறும் சினிமா பஞ்ச் அல்ல. வடிவேலுவின் வாழ்க்கைக்கும் அவருடைய கலைப் பயணத்துக்கும் கச்சிதமாகப் பொருந்தும் வசனம். ஆம் வடிவேலுவின் நகைச்சுவைப் பயணத்துக்கு எண்டே(முடிவு) கிடையாது என்பதைக் காலம் நிரூபித்திருக்கிறது. அவர் மிகக் குறைவான எண்ணிக்கையிலான திரைப்படங்களில் நடித்த கடந்த பத்தாண்டுகாலத்திலும்கூட அவர் தொலைக்காட்சி, யூட்யூப்பில் நகைச்சுவைக் காட்சிகளைப் பார்ப்பது, சமூக ஊடகங்களில் அவருடைய புகைப்படங்களையும் வசனங்களையும் வைத்து மீம்கள் போடுவது, அனைத்து வகையான உரையாடல்களிலும் பொருத்தமான இடங்களில் அவருடைய பிரபலமான வசனங்களை பயன்படுத்துவது என வடிவேலு தமிழ் மக்களுடன் மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் பிணைக்கப்பட்டிருந்தார். குறிப்பாக கரோனா பெருந்தொற்றால் வீட்டுக்குள் முடங்கி பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறுகாரணங்களாலும் மன அழுத்தத்துக்கும் சோர்வுக்கும் உள்ளாகியிருந்த மக்களுக்கான மருத்துவமாக வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் செயல்பட்டன. அந்த வகையில் பெருந்தொற்றுக் காலத்தில் இந்த சமூகத்துக்கு வடிவேலு என்னும் கலைஞனின் முக்கியத்துவம் இன்னும் அதிகமாக உணரப்பட்டிருக்கிறது. தற்போது அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருப்பதன் மூலம் அவருடைய திரைப்பயணமும் மீண்டும் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது.

தற்போது ஐந்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் வடிவேலு முதல் படத்தின் தொடக்க விழாவில் பேசிய விதம் அவருடைய நகைச்சுவைத் திறன் துளியும் குறைந்துவிடவில்லை என்பதை நிரூபித்தது. உண்மையில் அவரையும் அவருடைய நகைச்சுவையையும் பிரிக்கவே முடியாது. வடிவேலு திரையில் மட்டுமல்ல நேரில் பேசினாலும் பொது நிகழ்ச்சிகளில் பேசினாலும் சிரித்துக்கொண்டே இருக்கலாம். ரசித்துக்கொண்டே இருக்கலாம். இவற்றின் மூலம் வடிவேலு இன்னும் பல நூறு படங்களில் நடித்து நகைச்சுவையை வாரி வழங்கி ரசிகர்களை சிரிக்க வைத்து கவலைகளை மறக்க வைத்துக்கொண்டே இருக்கப் போகிறார் என்னும் நம்பிக்கை பெருவாரியான மக்களிடம் உருவாகியிருப்பதை உணர முடிகிறது. அதுவே வடிவேலுவின் 61ஆம் பிறந்தநாளை இன்னும் பல மடங்கு கொண்டாட்டத்துக்குரியதாக ஆக்கியிருக்கிறது.

இந்த நம்பிக்கை பலிக்கட்டும். வடிவேலுவின் வெற்றிப் பயணம் இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடரட்டும். அவருடைய உடல் ஆரோக்கியமும் மனநிம்மதியும் பன்மடங்கு பெருகட்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வடிவேலு!

தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

Source link

Related Posts