தலைவி – விமர்சனம் {2.75/5} – THALAIVI Cinema Movie Review : தலைவி – தயக்கத்துடன்… | Movie Reviews | Tamil movies


விமர்சனம்

தயாரிப்பு – வைப்ரி மோஷன் பிக்சர்ஸ், கர்மா மீடியா அன்ட் என்டர்டெயின்மென்ட், ஜீ ஸ்டுடியோஸ்
இயக்கம் – விஜய்
இசை – ஜி.வி.பிரகாஷ்குமார்
நடிப்பு – கங்கனா ரணவத், அரவிந்த்சாமி, நாசர், சமுத்திரக்கனி மற்றும் பலர்
வெளியான தேதி – 10 செப்டம்பர் 2021
நேரம் – 2 மணி நேரம் 33 நிமிடம்
ரேட்டிங் – 2.75/5

ஒரு பிரபலத்தின் பயோபிக் படம் என்றால் அவர்களது வாழ்க்கையை உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும். ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் மறைந்த முதலமைச்சர், நடிகை ஜெயலலிதாவின் பயோபிக் படமா என்று பலத்த சந்தேகத்துடன்தான் சொல்ல வேண்டும்.

அதைவிட, ஒரு நடிகையாக இருந்து முன்னணி நடிகையாக உயர்ந்து, வாய்ப்பிழந்து தடுமாறி, யதேச்சையாக அரசியலில் நுழைந்து, அங்கு பலத்த எதிர்ப்புகளையும் சமாளித்து, முதல்வராக உட்கார்ந்த ஒரு பெண்ணின் கதை என்று வேண்டுமானால் சொல்லலாம். இதை ஜெயலலிதாவின் பயோபிக் படம் என்று தவிர்த்துப் பார்த்தால் வழக்கமான சினிமாவாக ரசிக்கலாம். மாறாக பயோபிக் என்று உருவாக்கியவர்களே சொன்னார்கள் அது ரசிகர்களை ஏமாற்றிய ஒரு நியாயமற்ற படைப்பு.

சமீப காலத்தில் வெளிவந்த பயோபிக் படங்களில் மறைந்த நடிகை சாவித்ரியின் பயோபிக் படமான நடிகையர் திலகம் படம் ஒரு முழுமையான பயோபிக் படமாக அமைந்தது. ஒளிவு மறைவில்லாத ஒரு படமாக அந்தப் படத்தைக் கொடுத்திருந்தார்கள். பயோபிக் என்றால் அப்படியான உண்மை பேசும் படமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதாவின் பயோபிக்கை அப்படி உருவாக்கவும் முடியாது. சில பல ரகசியங்கள் அடங்கிய வாழ்க்கைதான் அவரது வாழ்க்கை. அதை அப்படியே வெளிப்படையாகவும் சொல்ல முடியாது. அதனால், இந்தப் படத்தை பயோபிக் என்று சொல்லாமல் இருப்பதே நல்லது.

மக்கள் கொண்டாடும் சினிமா ஹீரோவானா எம்ஜெஆர் உடன் தனது 16வது வயதிலேயே ஜோடியாக நடிக்கிறார் ஜெயா. இருவரது ஜோடியும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போக தொடர்ந்து சில படங்களில் ஒன்றாக நடிக்கிறார்கள். தன்னை விட மிகவும் வயது மூத்தவரான எம்ஜெஆர் மீது காதலில் விழுகிறார் ஜெயா. முதலில் அதை ஏற்க மறுக்கும் எம்ஜெஆரும் போகப்போக ஜெயாவின் அன்பில் சிக்கிக் கொள்கிறார். அரசியலிலும் செயல்படும் எம்ஜெஆர் ஒரு கட்டத்தில் தான் சார்ந்த கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பிக்கிறார். அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டி இருப்பதால் ஜெயா உடனான அன்பை முறித்துக் கொள்கிறார். அதன்பின் ஜெயாவிற்கும் சினிமா வாய்ப்புகள் குறைகிறது. எம்ஜெஆர் முதல்வர் ஆகிறார். ஒரு விழாவில் நடனமாட வரும் ஜெயாவை சந்திக்கும் எம்ஜெஆர், ஜெயாவை தனது கட்சிக்குள் சேர வைத்து பணியாற்ற வைக்கிறார். அவரை எம்.பி.யாகவும் ஆக்கி டில்லிக்கு அனுப்புகிறார் எம்ஜெஆர். டில்லியில் கூட்டணி பேசும் அளவிற்கு வளரும் ஜெயாவை திடீரென கட்சியை விட்டு நீக்குகிறார்கள். அரசியலிலிருந்து ஒதுங்குகிறார் ஜெயா. எம்ஜெஆர் மறைவுக்குப் பின் கட்சி அவரது பின்னால் போகிறது. எம்எல்ஏ ஆகவும் ஆகி எதிர்க்கட்சித் தலைவராகவும் சட்டசபை செல்பவருக்கு ஆளும் கட்சியால் பெருத்த அவமானம் நேர்கிறது. முதல்வராகத்தான் மீண்டும் நுழைவேன் என சபதம் எடுக்கிறார். அந்த சபதத்தில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

எம்ஜெஆர், ஜெயா, ஆர்என்வி, கருணா, ஜானகி, சசி என சில முக்கியமான கதாபாத்திரங்களைச் சுற்றி நகர வேண்டிய கதை இடைவேளை வரை எம்ஜெஆர், ஜெயா காதலைச் சுற்றியே நகர்கிறது. அதன்பின் ஜெயா, ஆர்என்வி இடையேயான ஈகோ மோதலில் நகர்கிறது. இடையிடையேதான் மற்ற கதாபாத்திரங்களை திரைக்கதையின் திருப்புமுனைக்காக நுழைத்து சமாளித்திருக்கிறார்கள். காட்சிகள் தொடர்ச்சியாக நூல் பிடித்தாற் போல நகராமல் துண்டு துண்டாக நகர்வது படத்தை ரசிப்பதன் ஈடுபாட்டைக் குறைத்துவிடுகிறது.

ஹீரோயிசக் கதைகள் போல இது ஹீரோயினிசக் கதை அதில் ஜெயா என்ற போராடும் குணம் படைத்த பெண்மணியைப் போற்றும் காட்சிகளை மட்டுமே வைக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார்கள். அவர் செய்யும் சில தவறுகள், அவருக்கேற்படும் சறுக்கல்கள் ஆகியவற்றைக் காட்ட மறுத்து விட்டார்கள்.

ஜெயா என்ற நடிகையாக, அரசியல்வாதியாக, பெண்மணியாக நடிப்பால் எந்தக் குறையையும் வைக்கவில்லை கங்கனா ரனவத். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் எக்ஸ்பிரஷன் குயின் ஆகவே இருக்கிறார். இது ஒரு ஜெயலலிதா பயோபிக் என்று சொல்லி அதன்படி பார்க்க வேண்டுமென்றால் பொருத்தம் என்பதை ஏணி வைத்தாலும் எட்ட முடியாது. ஆணோ, பெண்ணோ தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றி பெறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த ஜெயா கதாபாத்திரம் ஒரு முன்னுதாரணமாக அமையும். அந்த அளவிற்கு தனது நடிப்பால் மற்றவர்களும் உத்வேகம் பெறும் அளவிற்கு நடித்திருக்கிறார் கங்கனா. நாம் சொல்லவே வேண்டாம், இந்த வருடத்திற்கான தேசிய விருதை இப்போதே கங்கனாவின் பெயரில் எழுதி வைத்துவிடுவார்கள்.

எம்ஜெஆர் ஆக அரவிந்த்சாமி. 60, 70களின் சினிமா நடிகரை திரையில் காட்ட ரொம்பவே முயற்சி எடுத்திருக்கிறார். அதில் ஓரளவே வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கான மேக்கப், விக்குகள், ஆடைகள் அவருக்கு சிறிதும் பொருத்தமாக இல்லை. எம்ஜிஆரைப் போல் தன்னைக் காட்டிக் கொள்ள பாவம், அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார். நமக்கோ, மேடைகளில் எம்ஜிஆரைப் போல் நடனமாடி நடிக்கும் நடிகர்கள் தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.

ஆர்என்வி என்ற எம்ஜெஆரின் வலதுகரமாக சமுத்திரக்கனி. படத்தில் கங்கனாவிற்கு அடுத்து தனது நடிப்பால் அதிகம் பேசப்படுபவர் சமுத்திரக்கனிதான். அவரது அலட்சியமான பார்வையும், பேச்சும் அவரது முக்கியத்துவம் என்ன என்பதை முதல் காட்சியிலேயே உணர்த்திவிடுகிறது. தான் ஒரு கேடயம் தான் என்பதை அவர் சொல்லும் காட்சி பவர்புல். எம்ஜெஆர் முன்பு கூட ஆர்என்வி தான் பவர்புல்லாகத் தெரிகிறார் என்றால் சமுத்திரக்கனியின் நடிப்பு எப்படி என யோசித்துக் கொள்ளுங்கள். ஆனாலும், ஒரு வில்லத்தனமான கதாபாத்திரமாக ஏன் உருவாக்கினார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

ஜெயாவின் அரசியல் எதிரியாக கருணா கதாபாத்திரத்தில் நாசர். ஆனால், இவர் சில காட்சிகளில்தான் வருகிறார். இவரை எதற்கு பல்லைக் கடித்துக் கொண்டு வசனம் பேசச் சொன்னார் இயக்குனர் எனத் தெரியவில்லை.

ஜெயாவின் உதவியாளராக தம்பி ராமையா தான் மற்ற நடிகர்களில் கவனம் ஈர்ப்பவர். ஜெயாவின் அம்மாவாக பாக்யஸ்ரீ, உதவியாளர் சசியாக பூர்ணா, ஜானகியாக மதுபாலா சில காட்சிகளில் வந்து போகிறார்கள். மற்ற கதாபாத்திரங்களுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை.

ஜிவி பிரகாஷ்குமார் இசையில் பின்னணி இசை படத்துடன் ஒன்றி இருக்கிறது. பாடல்கள் கேட்கும் போது ரசிக்க வைக்கிறது, வெளியில் வந்ததும் மறந்து போகிறது. ஜெயாவின் அறிமுகப் பாடலில் ஹிந்தி வாடை அடிக்கிறது.

படத்தின் கலை இயக்குனர் ராமகிருஷ்ணா, மோனிகா நிகோட்ரி ஆகியோருக்கு அதிக வேலை. அந்தக் காலத்தை நம் கண்முன் அப்படியே கொண்டு வந்திருக்கிறார்கள். விஷால் விட்டல் ஒளிப்பதிவு காலங்களை அப்படியே பதிவு செய்துள்ளது. மதன் கார்க்கியின் வசனம் சில இடங்களில் ஷார்ப் ஆக இருக்கிறது.

இரண்டரை மணி நேரப் படத்தில் எதை சேர்ப்பது, எதைத் தவிர்ப்பது என்று குழம்பியிருப்பது தெரிகிறது. வெளிப்படையாகச் சொன்னால் தவறாகிவிடுமோ, எதிர்ப்பு வந்துவிடுமோ என்று தயங்கித் தயங்கி காட்சிகளைச் சேர்த்திருக்கிறார்கள். அதுவே படத்திற்கு எதிராக அமைந்திருக்கிறது. எந்தத் தயக்கமும் இன்றி உள்ளதை உள்ளபடி சொல்லியிருந்தால் உன்னதத் தலைவியாக அமைந்திருக்கும்.

தலைவி – தயக்கத்துடன்…

 Source link

Related Posts