சினிமா, போட்டோ சூட்டிங் நடத்த குவிகிறார்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பாரியக்கல் பீச்: இயற்கையை ரசிக்க அற்புதமான கடற்கரை


கருங்கல்:முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டம் இயற்கையின் வரப்பிரசாதமாகும். இங்கு மலைகளும், காடுகளும், கடல் சார்ந்த பகுதிகளும் அதிகம். 63 கி.மீ. நீள மேற்கு கடற்கரை குமரி மாவட்டத்தில் தான் உள்ளது. கொள்ளை அழகு கொண்ட அரபிக்கடலின் தாலாட்டில் இருக்கும் மாவட்டம் ஆகும். ஆக்ரோஷமான அலைகள் உருவானாலும் கூட, அழகிற்கு பஞ்சமில்லாத கடற்கரைகள் இங்கு ஏராளம். மாவட்டத்தில் 95 சதவீதம் கடலோர கிராமங்கள் மேற்கு கடற்கரையில் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைக்கு இணையானது மேற்கு கடற்கரை  ஆகும். இதனால் தான் மாவட்ட கடற்கரை பகுதிகள் கூட நீர் வளம், பசுமையான  மரங்கள் சூழ்ந்து பசுமை போர்வை போர்த்தி உள்ளது. குமரி மாவட்டத்துக்கு இயற்கை அரணாக வடக்கிலும், கிழக்கிலும் எல்லைகளாக  கடல் மட்டத்தில் இருந்து 6000 அடி உயரம் கொண்ட  மலை தொடர் உள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் மழை பெய்யும் மாவட்டமாக உள்ளது. கடலோர  பகுதிகள் கூட மிக செழிப்பான, பசுமையான தென்னை மரங்களை  கொண்டிருக்கிறது. மலைகளுக்கும், கடலுக்கும் உள்ள தூரம் 5 கிலோ மீட்டருக்கும் குறைவானதாகும்.

இவ்வாறு சிறப்புகளை கொண்ட கடற்கரை பகுதிகள் சுற்றுலா தலங்களாகவே உள்ளன. அந்த வகையில், தற்போது இயற்கையின் அழகை தன்னகத்தே ஈர்த்துள்ள பாரியக்கல் பீச் தற்போது வேகமாக சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கும் கடற்கரை பகுதியாக மாறி உள்ளது.
கருங்கல் அருகே குறும்பனை பறவிளை என்ற இடத்தில் பாரியக்கல் பீச் உள்ளது. இயற்கை எழில் மிக்க ரம்மியமான சூழல் மற்றும் நீளமான கடற்கரையை கொண்டுள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமே அதிகம் வந்து சென்ற பகுதியில் தற்போது வெளியூர்களில் இருந்து வருபவர்களும் அதிகரித்துள்ளனர். இங்கு பாறைக்குன்றுகள் அதிகம் உள்ளன.  இவை இயற்கையாகவே அமைந்துள்ள பாறைக்குன்றுகள் ஆகும். கடலில் உள்ள பாறை குன்றுகளில் அமர்ந்து நேரம் போவதே தெரியாமல் கடல் அழகை ரசிக்கலாம்.  பாறைகளில் அலைகள்  வந்து மோதுவது மிகவும் ரம்மியமாக இருக்கும். அலைகளின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், பாறைகளில் அமர்ந்து அழகை ரசிப்பது ஆபத்தானது ஆகும். இதுகுறித்து பொதுமக்களை எச்சரிக்கை  செய்யும் வகையில், அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

குறும்பனையில் இருந்து சுமார் 1 கி.மீ. தூரத்திலும், ஆலஞ்சியில் இருந்து 2 கி.மீ. தூரத்திலும் பாரியக்கல் பீச் அமைந்துள்ளது.  தற்போது இயற்கை அழகை  ரசிக்க ஏராளமானவர்கள் வருகிறார்கள். குறிப்பாக புதுமண தம்பதிகள் போட்டோ சூட்டிங் நடத்தும் தலமாக பாரியக்கல் மாறி உள்ளது. நாள் தோறும் இளம்  ஜோடிகள் அதிகம் வந்து செல்கிறார்கள். சினிமா சூட்டிங், குறும்படங்களின் சூட்டிங் அதிகம் நடக்கிறது. மணற்பரப்புகள், பாறைகள் என இயற்கை எழில் நிறைந்த கடற்கரை பகுதியாக இருப்பதால் ஒளிப்பதிவு செய்ய மிகவும் ரம்மியமாக இருப்பதாக கூறுகிறார்கள். கடல் அலைகளின் வேகம் அதிகமாக இருப்பதால், கடலில் குளிப்பது சற்று ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. போதிய எச்சரிக்கை அறிவிப்புகள் இருந்தும் கூட அதை புறந்தள்ளி விட்டு சிலர் கடலில் நீராடி, அலையில் சிக்கி கொள்கிறார்கள். எச்சரிக்கையுடன் இருந்தால் விபரீதத்தை தவிர்க்கலாம். இந்த பாறைகள் தான் இந்த கடலுக்கே அழகு சேர்ப்பவையாக அமைந்துள்ளன. இந்த பகுதியில் கடற்கரை ஒரே நீளத்தில் அமைந்திருக்கும்.

மழை காலங்களில் கடலில் கலக்கும் தண்ணீர், நேரடியாக கடலுக்கு வராமல், ஊர்களுக்குள் சென்று விட்டு, கடைசியாக கடலில் கலக்கும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட பாரியக்கல் பீச் பகுதியில் பல தனியார் தென்னந்தோப்புகளும் அமைந்துள்ளன. கடற்கரைகளில் அமைந்துள்ள தென்னந்தோப்புகளில் அமர்ந்து, பலர் சமைத்து சாப்பிட்டு கடல் அழகை ரசிக்கிறார்கள். காலை முதல் மாலை வரை வீசும் ரம்மியமான கடற்கரை காற்றில் பொழுதை கழிப்பதே மிகப்பெரிய சுகம் ஆகும். இந்த கடற்கரை பகுதியில் போதிய மின் விளக்கு  வசதிகள் செய்யப்பட வில்லை. இதனால் இரவு 6 மணிக்கு பின், அந்த பகுதிக்கு செல்வது சிரமமானது. எனவே பகல் வேளையில் சென்றால், நிச்சயம் கடல் அழகை ரசிக்க முடியும்.

வெள்ளி கட்டிகள் விழுந்த கடற்கரை
பாரியக்கல் பீச் ஒதுக்குபுறமான பகுதியில் உள்ளதால் கடத்தல் சம்பவங்கள் நடந்ததாக கூறுவார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த கடல் வழியாக வெள்ளி கட்டிகளை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் படகில் கொண்டு சென்றனர்.  ஆனால் அலையின் வேகம் காரணமாக படகு கவிழ்ந்தது. இதில் வெள்ளிக்கட்டிகள் கடலில் விழுந்தன. இது தொடர்பாக காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டு, கடலில் விழுந்த வெள்ளி கட்டிகளை மீனவர்கள் உதவியுடன் மீட்டதாகவும் கூறுவார்கள்.

சுற்றுலா துறை சார்பில் மேம்பாடு
பாரியக்கல் பீச் பகுதியில் தற்போது சுற்றுலா துறை சார்பில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம், சுற்றுலா துறை இணைந்து இதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அழகிய கடற்கரையில் செயற்கையாக எதுவும் செய்து விடாமல், போதிய பாதுகாப்பு வசதிகளை மட்டுமே செய்து ெகாடுத்தாலே சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்க முடியும்.

பாறைகள் நிறைந்ததால் பாரியக்கல் இந்த கடற்கரைக்கு பாரியக்கல் என பெயர் வர பல்வேறு காரணங்களை கூறுவார்கள். இதில் ஒன்று பாறைகள் நிறைந்ததால் பாரியக்கல் என அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். குமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வருபவர்கள் பாரியக்கல் சென்றால், நிச்சயம் இயற்கையை முழுமையாக அனுபவித்த பலன் கிடைக்கும்.

Source link

Related Posts