ஓடிடி திரைப் பார்வை: ‘ஆல்பா அடிமை – சிம்பிளான த்ரில்லர் சினிமா! | Alpha Adimai (2021) | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


ஓடிடி தளங்கள் மாற்று சினிமா முயற்சிகளுக்கு நல்ல வாய்ப்பு என்பதை பலமுறை குறிப்பிட்டிருக்கிறோம். அது போல சின்ன பட்ஜட் படங்களுக்கும் ஓடிடி தளங்கள் மூலம் நல்ல சந்தை கிடைத்து வருகிறது. சோனிலைவில் வெளியாகி இருக்கும் ஆல்பா அடிமை எனும் த்ரில்லர் ஆக்சன் சினிமா பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

image

தன் தம்பி ஆறுவுடன் சேர்ந்து கஞ்சா வியாபாரம் செய்கிறார் மயில்சாமி. போலீஸ் தன்னை நெருங்கும் ஒரு சூழலில் தன்னிடமிருக்கும் பத்துலட்ச ரூபாய் மதிப்பிலான கஞ்சாவுடன் கோவையிலிருந்து ஊட்டி தப்பிச்செல்ல முயல்கிறார். அந்த விறுவிறு பயணத்தில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் ஆல்பா அடிமையின் திரைக்கதை. ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஓடும் இத்திரைப்படம் ஒரே இரவில் நடப்பதாக படமாக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு வகையான பட்ஜட் குறைப்பு யுத்திதான். ஆனால் படத்தில் எங்குமே திரைக்கதை சோர்வோ சுணக்கமோ இல்லை. மயில்சாமியிடம் வேலை செய்யும் பொன்னன், பூனையாக இருந்து க்ளைமேக்ஸில் புலியாக மாறுகிறார். அடிவாங்கும் அடிமை போல தோன்றும் அக்கதாபாத்திரம்தான் அந்த இரவினை தன் புத்திசாலித்தனமான திட்டங்களால் நகர்த்துகிறது.

image

கோவையிலிருந்து ஊட்டி செல்ல மயில்சாமி குழு பயன்படுத்தும் வாடிக்கையாளரின் காருடன் சேர்த்து மொத்தமே படத்தில் சில லொகேஷன்கள்தான் காட்டப்படுகின்றன. இயக்குநர் ஜினோவி இந்த சின்ன பட்ஜட் மற்றும் வாய்ப்பை முடிந்த மட்டும் நிறைவாக பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். மயில்சாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கல்கி ஒரு தேர்ந்த நடிகராக வெளிப்பட்டிருக்கிறார். பொன்னன் கதாபாத்திரத்தில் வரும் ஈஸ்வர் சின்னச் சின்ன முக பாவங்களில் கதைக் கேற்ற கொடூரத்தை வெளிக்காட்டி மிரட்டுகிறார். அடுத்து என்ன நடக்கவிருக்கிறது என்ற சஸ்பன்ஸை இறுதிவரை தக்க வைத்திருப்பதில் இத்திரைக்கதை வெற்றி பெற்றுள்ளது. சோனி ஆல்பா கேமராவில் பதிவு செய்து அடோப் ப்ரீமியரில் எடிட் செய்திருக்கிறார்கள். ஒரு நல்ல சினிமா எடுக்க இந்த அளவிலான தொழிநுட்ப வசதிகளே போதும் என நிரூபித்திருக்கிறது ஆல்பா அடிமை.

image

முழுக்க முழுக்க புதிய படக்குழு என்பதால் இப்படத்தில் இருக்கும் சில லாஜிக் குறைகளை பரிசீலிக்கத் தேவையில்லை. படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கி இருக்கலாம். மற்றபடி ஆல்பா அடிமை எனும் இந்த சினிமா த்ரில்லர் ஆக்‌ஷன் வகை சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்து.Source link

Related Posts